அம்னோ பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு


அம்னோ உச்சமன்றம், அம்னோ பொதுக்கூட்டத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளது. அப்துல்லா அகமட் படாவியிடமிருந்து நஜிப் அப்துல் ரசாக்குக்கு அதிகாரத்தை மாற்றிவிடும் நிகழ்வு சுமுகமாக நடைபெறுவதற்கு வசதியாக இவ்விதம் செய்யப்படுகிறது.

அம்னோ பொதுக்கூட்டமும் கட்சித் தேர்தல்களும் டிசம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்தன.

எனினும் தொகுதித் தேர்தல்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி அக்டோபர் 9 தொடங்கி நவம்பர் 9 ஆம் தேதிவரை நடைபெறும்.

இன்று காலை நடைபெற்ற அவசர உச்சமன்றக் கூட்டத்தில் இம்முடிவுகள் செய்யப்பட்டன.

கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அப்துல்லா, கட்சித் தேர்தலில் தலைவர் பதவியைத் தற்காத்துக்கொள்வாரா என்பது பற்றிக் கருத்துரைக்க மறுத்தார். அக்டோபரில் தொகுதி நிலையில் தேர்தல்கள் நடைபெறுவதற்குமுன் அது பற்றி முடிவு செய்யப்பட்டும் என்று அவர் சொன்னார்.

“எனக்கு நெருக்குதல் எதுவும் இல்லை. அது (அதிகார மாற்றம்) நான் எடுக்கும் முடிவாக இருக்கும்”, என்றாரவர்.

“அதிகார மாற்றத்துக்கு வசதியாக பொதுக்கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது”, என்றும் அப்துல்லா கூறினார்.

அப்துல்லா,முதலில் 2010 ஜூன் மாதம்தாம் அதிகாரத்தை நஜிப்பிடம் ஒப்படைகக் திட்டமிட்டிருந்தார்.ஆனால் அண்மைய வாரங்களில், அதிகார மாற்றம் அடுத்த ஆண்டு நடுப்பகுதி வாக்கில் நிகழ வேண்டும் என்ற நெருக்குதல் அதிகரித்து வந்துள்ளது.

கருத்துகள் இல்லை: