பாமரன் - புலம்பல்கள் .......

புதுப் புது “அர்த்தங்கள்”…

பத்தாம் தேதி இரவு பத்தரை மணிவரைக்கும் எழுத

எண்ணியிருந்த கட்டுரை வேறு.

அதற்கான ‘தயாரிப்புகள்’ வேறு.

ஆனால் எதிரேயிருந்த நண்பன் கேட்ட கேள்வியில்

எழுத இருந்த கட்டுரையே திசைமாறிப் போனது.

தீவிரவாதிகள் - அகிம்சாவாதிகள் - தியாகிகள் - துரோகிகள் -

என்கிறார்களே அது யார் யார்? என்றான் அப்பாவியாக.

கொஞ்சம் யோசித்தால் தலை சுற்றுகிறது நமக்கு.

இந்தக் குழப்பம் குருதிப்புனல் எடுத்த கமலகாசனுக்கே..

மன்னிக்க…கமல் ஹாஸனுக்கே இருந்தால்

இந்தச் சிறுவனுக்கு எப்படி இல்லாது போகும்?

உண்மைதான்…

தீவிரவாதிகள் யார்?

அடிப்படைவாதிகள் யார்?

போராளிகள் யார்?

பயங்கரவாதிகள் யார்?

இவர்களுக்குள் என்ன அடிப்படை வேறுபாடு?

அதைக் காட்டிலும் இவர்கள் எதன் பொருட்டு…?

ஏன் உருவாகிறார்கள் என்பது அடிப்படையிலும் அடிப்படையான கேள்வி.

நமக்கு எப்போதுமே ‘விளைவுகள்’தானே முக்கியம்…

அடிப்படைக் காரணங்கள் ஆயிரம் இருந்தாலென்ன?

வரலாற்று ரீதியாகப் பார்த்தால்

இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அந்நியரோடு போர் தொடுத்த

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ‘தீவிரவாதி’.

ஆனால் இந்திய கப்பற்படை எழுச்சியை எதிர்த்த

மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி ‘அகிம்சாவாதி’.

பாரத் நவ ஜவான் சபாவை கட்டமைத்து

அப்பாவிகள் யாரும் சாகாது குண்டு வீசிய பகத்சிங் ‘அதி பயங்கரவாதி’.

பகத்சிங்கை தூக்கிலேற்றிய ஆங்கிலேய அரசு ‘மிதவாதி’.

ஆகஸ்டுப் ‘புரட்சி’யில் தந்திக் கம்பங்களைச் சாய்த்து

தபாலாபீசுகளைக் கொளுத்திய காங்கிரஸ்காரர்கள்

பிரிட்டிஷ் கணக்குப்படி பார்த்தால் ‘பயங்கரவாதிகள்’.

சுதந்திர இந்தியாவின் கணக்குப்படி தேசத் தியாகிகள்

இந்தக் குழப்பம் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களூக்கு

மட்டும்தான் என்றில்லை,

தத்துவப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களுக்கும் நீடிக்கத்தான் செய்தது.

சாதியை அடிப்படையாகக் கொண்ட வர்ணாசிரம முறையை

ஏற்றுக்கொண்ட எம்.கே.காந்தி அகிம்சாவாதியாகவும்…

சாதீய அமைப்பையே தகர்த்தெறிய வேண்டும் என்று போராடிய

பி.ஆர்.அம்பேத்கர் தீவிரவாதியாகவும் சித்தரிக்கப் பட்டது வரலாற்றுச் சோகம்.

எண்ணக் குதிரையை எண்பதுகளில் நிறுத்தினால்

ஸ்வீடனிலிருந்து ‘அதி நவீன’ ஆயுதங்கள் வாங்கிக் குவித்த

ராஜீவ்காந்தி ‘தேச பக்தர்’.

அந்த பணத்தில் ஒரு லட்சம் ஓராசிரியர் பள்ளிகளுக்கு

ஓடாவது போட்டிருக்கலாமே என்றவர்கள் ‘தேசத்துரோகிகள்’.

சர்வதேச அரசியல் அரங்கில் இந்தியாவின் ‘முற்போக்கு’க் கணக்குப்படி…

திம்புவில் நடந்த பேச்சுவார்த்தைக்கு சொன்னவுடன் வந்தால் போராளிகள்.

பிற்பாடு வந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தால் ‘தீவிரவாதிகள்’.

‘அறவழியில்’ கருப்புக்கொடி காட்டிய தி.மு.க.வினரிடமிருந்து

இந்திராவைக் காப்பாற்றிய நொடிவரையில்

காங்கிரஸ்காரர்களுக்கு நெடுமாறன் ஒரு தேசபக்தர்.

பிற்பாடு ‘தேசத்துரோகி’.

நல்லவேளையாக இவர்கள் ‘இந்திராவைக் காப்பாற்றியதே

மிகப்பெரிய தேசத்துரோகம்’ என்று சொல்லாமல் விட்டார்களே

என்கிற அளவில் மற்றவர்கள் மகிழ்ச்சி அடையலாம்.

சர்வதேச அளவிலாகட்டும் - இந்திய அளவிளாகட்டும் -

அவரவர்களுக்கென்று தனித்தனி அகராதிகள்.

அவைகளுக்கே உரித்தான புதுப் புது அர்த்தங்கள்

மத சம்பந்தமான விஷயங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

பாபர் மசூதியை இடிப்பவன் ‘மிதவாதி’.

இடிப்பைக் கண்டிப்பவன் ‘முஸ்லிம் தீவிரவாதி’…

(உலகளாவிய ‘பார்வையில்’

இந்து - கிருஸ்துவ - யூதத் தீவிரவாதிகள் என்று யாருமே கிடையாது

என்பது சுவாரசியமான விஷயம்.)

பாலஸ்தீனியர்களை சொந்த மண்ணை விட்டு

விரட்டியடிப்பது ‘அகிம்சாவாதம்’.

நாடற்றவர்கள் அவலக் குரல் எழுப்புவது ‘பயங்கரவாதம்’.

மான்கடா படைத் தாக்குதலில் விசாரிக்கப்பட்டபோது

பிடல் காஸ்ட்ரோ ஒரு ‘பயங்கரவாதி’.

மக்கள் அலையில் பாடிஸ்டா மூழ்கடிக்கப்பட்டபோது

பிடல் காஸ்ட்ரோ புரட்சியின் நாயகன்.

தங்கத் தமிழ் மண்ணைப் பொறுத்தவரையும் ஒரு அகராதி உண்டு.

அதுதான் தமிழில் கல்வியும் - வழிபாடும் - குடமுழுக்கும் - ஒதுக்கப்பட்டோருக்கு உரிமையும்

வேண்டும் என்பவர்கள் ‘தமிழ்த் தீவிரவாதிகள்’.

“தாழ்த்தப்பட்ட மக்கள் பியூட்டி பார்லருக்குப் போய்

‘பேசியல்’ செய்து கொண்டு…

‘ஹெட்ஸ் அண்ட் ஷோல்டர்ஸ்’ ஷாம்ப்போடு

‘லக்ஸ்’ போட்டுக் குளித்து…

யார்ட்லி செண்ட்டோடுதான் கோயிலுக்குள் வரவேண்டும்” என்கிற

மடச் சாமியார் ‘மிதவாதி’.

(தேசம் தழுவிய பார்வையில்

மலையாள - கன்னட - குஜராத்தி தீவிரவாதிகள்

என்று யாருமே கிடையாது என்பதும் சுவாரசியமான விஷயம்தான்.)

எது எவ்விதமோ…

ஆனால் காலச்சக்கரம் மட்டும் சுழலாமல் நிற்பதில்லை.

வரலாறுகள் மாறும்போது…

இன்றைய “துரோகிகள்”….

நாளைய தியாகிகள்.

ஆனால்….

இன்றைய “தியாகிகள்….?

இப்போ இதை படிச்சாலும் அப்படியே புல்லரிகுது சாமியோவ் .......


1 கருத்து:

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

நச்சுன்னு நடுமண்டையிலத் தட்டியிருக்கீங்க. ரொம்ப அருமை.